டெல்லி: ஜூலை 1 முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் பம்புகளில் காலாவதியான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, ஜூலை 1 முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்கள் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், எரிபொருள் வழங்கப்படாது என்று கூறப்பட்டது. முன்னதாக, காற்று தர மேலாண்மை ஆணையம் ஏற்கனவே டெல்லியில் காலாவதியான வாகனங்களைப் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவு 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த வாகனங்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டாலோ அல்லது பெட்ரோல் நிலையங்களுக்குள் நுழைந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இதற்காக 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.