திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி தரிசன டிக்கெட்டுகளை விற்ற கும்பலை திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை ஸ்கேன் செய்யும் பணியில் லட்சுமிபதி என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார், அவருடன் கூட்டுச் சேர்ந்த மணிகண்டா, ஜெகதீஷ், சசி மற்றும் பானு பிரகாஷ் ஆகியோர் பக்தர்களுக்கு போலி டிக்கெட்டுகளை விற்று மோசடி செய்தனர்.
தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கடந்த 14 ஆம் தேதி பக்தர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்தபோது, டிக்கெட்டுகள் போலியானவை என்றும், மோசடியில் ஈடுபட்டவர்கள் டிக்கெட்டுகளை முத்திரை குத்தி பக்தர்களுக்கு வழங்கியதும் தெரியவந்தது. ஸ்கேன் செய்யாமல் லட்சுமிபதி அவற்றை அனுப்பியதும் கண்டறியப்பட்டது.
மோசடியில் ஈடுபட்ட தேவஸ்தான ஊழியர்கள் லட்சுமிபதி, மணிகண்டா மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள சசி மற்றும் பானு பிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். போலி டிக்கெட்டுகள் மூலம் ரூ.19,000 பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.