பெங்களூரு: ‘ஸ்பா’ உரிமையாளரை மிரட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த டிவி தொகுப்பாளினி திவ்யா வசந்தா கேரளாவில் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக பணிபுரியும் திவ்யா வசந்தா (28), தனது சகோதரர் சந்தேஷ் மற்றும் வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து வாட்ஸ்அப்பில் ‘ஸ்பை ரிசர்ச் டீம்’ என்ற குழுவை அமைத்துள்ளார். இதன் மூலம் பணக்காரர்களை குறிவைத்து மிரட்டி பணம் பறித்தனர்.
இந்திரா நகர், 100 அடி ரோடு, 15வது மெயின் ரோட்டில் உள்ள, ‘ஸ்பா’வில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த, இளம் பெண்ணை, திவ்யா கும்பல் வேலைக்கு அமர்த்தியது. சந்தேஷ் ஒரு க்ளைண்டாக மறைக்கப்பட்ட கேமராவுடன் அவ்வப்போது ஸ்பாவிற்கு வருகை தருகிறார். ஸ்பா உரிமையாளர் சிவசங்கர், இளம்பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியது கேமராவில் சிக்கியது.
இதை அவருக்கு அனுப்பி, ‘நீங்கள் உங்கள் ஸ்பாவில் விபச்சாரம் செய்கிறீர்கள். இதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவோம். 15 லட்சம் ரூபாய் கொடுங்கள். இல்லையெனில் வீடியோவை ஒளிபரப்புவோம்’ என, மிரட்டினர். பயந்துபோன சிவசங்கர், 1 லட்சம் ரூபாயை கொடுத்தார்.
மீண்டும் பணம் கேட்டு மிரட்டியதால், ஜேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் விசாரணையை தொடங்கினர். வழக்கு பதிவு செய்யப்பட்ட திவ்யா வசந்தா தலைமறைவானார். வெங்கடேஷ், சந்தேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திவ்யாவை தேடி வந்தனர். தீவிர விசாரணையில், தமிழகம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. அவரை கண்டுபிடிக்க கேரளா சென்ற போலீஸ் குழு நேற்று அவரை கைது செய்தது.