கோழிக்கோடு மாவட்டத்தில் மூளை தின்னும் அமீபா எனப்படும் அரிதான தொற்றால் மேலும் ஒருவர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை ஆறு ஆக உயர்ந்துள்ளது. மலப்புரம் மாவட்டம் செலம்பரா பகுதியை சேர்ந்த 47 வயதான சாஜி, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மூளைக்காய்ச்சல் அறிகுறியுடன் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

அமீபிக் மூளை காய்ச்சல் எனப்படும் இந்த நோய் மிக விரைவாக பரவக்கூடியதல்ல, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்குகிறது. தற்போது இதே மருத்துவமனையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் மாநில சுகாதாரத் துறையில் பெரும் அச்சம் நிலவுகிறது.
சமீபத்தில் குழந்தைகள் உட்பட பல்வேறு வயது குழுவைச் சேர்ந்தோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயின் அறிகுறிகள் ஆரம்பத்தில் காய்ச்சல், தலைவலி, வாந்தி, கழுத்து வலி போன்றவையாக இருக்கும். பின்னர் விரைவில் மூளை செயல்பாட்டை பாதித்து உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. மருத்துவ நிபுணர்கள் நேரத்தில் கண்டறிதல் மற்றும் தீவிர சிகிச்சை அளித்தால் மட்டுமே சிலரை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
கேரளா சுகாதாரத் துறை அதிகாரிகள் மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சுத்தமற்ற நீரில் நீந்துதல் மற்றும் அசுத்தமான சூழலில் வாழ்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். அமீபா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.