புதுடில்லி: விவசாயிகளுக்காக 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட சூரியசக்தி வேளாண் திட்டம் எதிர்பார்த்தளவில் முன்னேறாமல், மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை இரண்டாவது முறையாக நீட்டிப்பதை பரிசீலித்து வருகிறது. இதன் நோக்கம், விவசாயிகள் சூரியசக்தி பம்புகள் மற்றும் சிறிய மின் ஆலைகளை நிறுவி, சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வதாகும்.
இந்த திட்டம் 30,800 மெகாவாட் சூரிய மின்சக்தியை உருவாக்கும் இலக்குடன் வந்தது. இதற்காக மத்திய அரசு 34,422 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால், கொரானா பெருந்தொற்று காரணமாக திட்ட செயல்பாடு தாமதமானது. முதல் காலக்கெடுவை 2026 மார்ச் வரை நீட்டித்து, சூரியசக்தி மின் உற்பத்தியை 34,800 மெகாவாட் வரை உயர்த்தியிருந்தது.

ஆனால், திட்ட செயல்பாடு இன்னும் மந்த நிலையில் உள்ளது. மூன்று பகுதிகளுக்கான இலக்கில், சிறு சூரியசக்தி மின் ஆலைகளை நிறுவுதல், முன்னேற்றம் மிகக் குறைவாக மட்டுமே உள்ளது. சில மாநிலங்களில் திட்டம் செயல்படவில்லை, மற்ற சில இடங்களில் மட்டுமே குறைந்த அளவின் மின் உற்பத்தி நிகழ்கிறது. நிறுவப்பட்ட 12.72 லட்சம் சூரிய பம்புகளில் 9.03 லட்சம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசு தற்போது தடைகளை மதிப்பாய்வு செய்து, திட்டத்தை விரிவுபடுத்தும் சாத்தியங்களை ஆராய்கிறது. விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி, நாட்டின் மின் உற்பத்தியை உயர்த்துவதில் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டிய அவசியம் உண்டு. இதனால் விவசாயிகள், சுற்றுச்சூழல் மற்றும் நாட்டிற்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.