பிரிட்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 22-ம் தேதி இரவு கொல்கத்தாவில் இருந்து லண்டன் சென்றார். கடந்த 23-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். லண்டனில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பங்கேற்றார். அப்போது, மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்கவும் முதலீடு செய்யவும் தொழிலதிபர்களை அழைத்தார். நேற்று முன்தினம் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கெல்லாக் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் மம்தா பங்கேற்று பேசினார்.
அப்போது, ’இந்திய மாணவர் கூட்டமைப்பு-யுகே’ என்ற அமைப்பு சார்பில் மம்தாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை, கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை, சந்தேஷ் காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். மம்தா பானர்ஜி, “மாணவர்களை அமைதி காக்க கேட்டுக்கொள்கிறேன். இது அரசியல் களம் அல்ல. என்னுடன் அரசியல் ரீதியாக மோத விரும்பினால் மேற்கு வங்கத்துக்கு வாருங்கள். நான் வங்கப் புலி. நான் எதற்கும் பயப்பட மாட்டேன்” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

ஆனால் மாணவர்கள் போராட்ட பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மம்தா தனது பேச்சை பாதியில் நிறுத்தினார். முன்னதாக நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மம்தா கூறியதாவது: சமுதாயத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவது மிகவும் கடினம். ஆனால் பிரிவினையை மிக எளிதாக தூண்டிவிடலாம். மேற்கு வங்க முதல்வராக இருக்கும் வரை பிரிவினைக்கு இடம் கொடுக்க மாட்டேன். அனைத்து சமூகத்தினரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மேற்கு வங்கத்தில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், நேபாளிகள் மற்றும் கூர்க்காக்கள் உட்பட சுமார் 33 சதவீத மக்கள் சிறுபான்மையினர். 6 சதவீதம் பேர் பழங்குடியினர். 23 சதவீதம் பேர் பட்டியல் சாதியினர்.
அவர்கள் அனைவரின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன்,” என்றார். இந்நிகழ்ச்சியின் போது, 2060-ல் இந்தியா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என்ற கணிப்புகள் வெளியாகின. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அதற்கு மம்தா, ”அதற்கு வாய்ப்பே இல்லை. இது தொடர்பான வீடியோவை பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாவதை முதல்வர் மம்தா விரும்பவில்லை. இது வெட்கக்கேடானது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். ஒரு முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.