புதுடில்லி: இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் தன்னம்பிக்கை மற்றும் உள்நாட்டு மயமாக்கல் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கு ஆப்பரேஷன் சிந்தூர் சிறந்த எடுத்துக்காட்டு என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு ரூ.46,000 கோடியிலிருந்து ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் ரூ.33,000 கோடி தனியார் துறையின் பங்களிப்பாகும். இதை மேலும் வலுப்படுத்த 2029க்குள் ரூ.3 லட்சம் கோடி இலக்கை நிர்ணயித்துள்ளோம் என்றார். மாணவர்கள் தங்களது திறன்களை வேலை தேடுவதற்காக மட்டுமே பயன்படுத்தாமல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தன்னம்பிக்கை அடிப்படையிலான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு திருப்பி விட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது, ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட பல முக்கிய உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டன. இதுவே நமது உள்நாட்டு தொழில்நுட்ப திறனின் சிறந்த சான்றாகும். புனே கலாசாரத்திலும் தொழில்நுட்பத்திலும் சிறப்பிடம் பெற்றது. இங்கே உருவாகும் முயற்சிகள் இந்திய பாதுகாப்பு துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டியாக உள்ளன என்றார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நீண்ட காலமாக பாதுகாப்பு உற்பத்தி துறையில் முக்கியமான மாற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், தற்போதைய அரசு தன்னம்பிக்கை நோக்கில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. “நமது இலக்கு சுயநிறைவு பெற்ற இந்தியா. உலகம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில், திறமை மற்றும் புதுமை மட்டுமே நம்மை நிலைத்திருக்கச் செய்யும்,” என ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.