புதுடெல்லி: விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை இஸ்ரோ தலைவர் நாராயணன் வாழ்த்தி வரவேற்றார். “சுனிதா வில்லியம்ஸை மீண்டும் வரவேற்கிறோம்” என்று சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், உங்கள் நீண்ட விண்வெளி பயணத்திற்குப் பிறகு பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறினார்.

“விண்வெளி ஆய்வுக்கான நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சிறந்த சான்றாகும். உங்கள் அர்ப்பணிப்பு உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆர்வலர்களை ஊக்குவிக்கிறது” என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் பணியாற்றும்போது, உங்கள் விண்வெளி ஆய்வு நிபுணத்துவத்தைப் பயன்படுத்த நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
இவ்வாறு, சுனிதா வில்லியம்ஸின் சாதனைகளைப் பாராட்டிய அவர், எதிர்காலத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளார்.