புதுடெல்லி: தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல் வருவதற்கு வாகன கட்டுப்பாடு விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை சீசனில் நீலகிரிக்கு வார நாட்களில் 6,000 சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களும், கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்கள் வராமல் இருக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த விதிகளின் அடிப்படையில் சுற்றுலா பேருந்துகளுக்கு கூட அனுமதி மறுக்கப்படுகிறது, இது எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. மேற்கண்ட வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், “சுற்றுச்சூழல் பிரச்னைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனவே, இவ்விவகாரங்களில் தலையிட்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை” என்று கூறினர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர், வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.