புதுடெல்லி: மேற்கு வங்க ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் 2022ல் உருவாக்கிய கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, “மேற்கு வங்கக் கல்வித் துறையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஆளுநரின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டதால், அதில் நீதித்துறை தலையிட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியது.
மேற்கு வங்க ஆசிரியர் பணியிடங்களுக்கான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், அந்த உத்தரவை இன்று ரத்து செய்தது. மேலும், கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்குவது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்த ரத்து உத்தரவு மட்டுப்படுத்தும். மேலும், மாநில முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தமை உள்ளிட்ட ஆசிரியர் பணி நியமன வழக்கின் மற்ற அம்சங்களுக்கு இவை தொடர்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் பணியாளர் தேர்வாணையத்தால் கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, கூடுதல் பணியிடங்களை உருவாக்குவது சட்டவிரோதமானது என்று கல்கத்தா உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த முடிவில் அமைச்சரவை உறுப்பினர்களை விசாரணைக்காக காவலில் வைக்க மத்திய புலனாய்வு அமைப்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கத்தில், மாநில பள்ளிக் கல்வித் துறை, 2016-ல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நடத்தியது. மொத்தம் 24,640 ஆசிரியர் பணியிடங்களுக்கு 23 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில் 25,753 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாநில அரசு வழங்கியது. இந்த ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகவும், பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றதாகவும் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீர்ப்பு வழங்கிய கல்கத்தா உயர்நீதிமன்றம், 25,753 பேரின் நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.