புதுடில்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமீபத்தில் நாட்டில் வெறிநாய்க்கடி மற்றும் ரேபிஸ் தொற்றால் பலர் உயிரிழந்த சம்பவங்கள் ஊடகங்களில் வெளியானதை அடுத்து, உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

முதலில், டில்லி நகரில் உள்ள அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, பாதுகாப்பான காப்பகங்களில் வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மூன்று நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.
அந்த அமர்வின் இறுதி தீர்ப்பில், தெருநாய்களை பொதுவாக காப்பகங்களில் அடைக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டது. வெறித்தனமாக நடக்கும் நாய்கள் அல்லது ரேபிஸ் பாதிப்பு உள்ள நாய்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டது. அதேசமயம், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவு அளிப்பதைத் தடை செய்துள்ளது. இதனால் தெருக்களில் அலைந்து திரியும் நாய்களை மக்கள் உணவளிக்கக்கூடாது. இந்த உத்தரவு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் நலனை ஒரே நேரத்தில் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.