மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் தொடர்பில் முக்கிய சந்தேக நபரான தஹாவூர் ராணா, நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பற்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், இந்தியாவில் சித்திரவதை செய்யப்படுவேன் எனக் கூறி நாடு கடத்தலுக்குத் தடையாக முயன்றாலும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அவற்றை நிராகரித்தது. இதையடுத்து, இந்தியா-அமெரிக்கா நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் கடந்த 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்தார்.

தஹாவூர் ராணா, 2009 அக்டோபரில் சிகாகோவில் கைது செய்யப்பட்டார். டேன்மார்க்கில் உள்ள ஒரு பத்திரிகை அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்த சதி செய்ததாகவும், லஷ்கர் இ தொய்பாவுக்கு ஆதரவளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் மும்பை தாக்குதலுடன் நேரடி தொடர்பு இல்லை என 2011-ல் அமெரிக்க நீதிமன்றம் ராணாவை விடுதலை செய்தது. இதையடுத்து இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அவரை எதிர்த்து 2011-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்தியா 2019-ல் ராஜதந்திர வழியில் அவரை நாடு கடத்தக் கோரியது. 2020-ல் தற்காலிகமாக கைது செய்யும் கோரிக்கை வைக்கப்பட்டதோடு, 2021-ல் பைடன் நிர்வாகம் நாடு கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், 2024-ல் தஹாவூர் ராணா உச்ச நீதிமன்றத்தில் நாடு கடத்தலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு ஜனவரி 2025-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கமைய ஏப்ரல் 9-ம் தேதி அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, ஏப்ரல் 10-ம் தேதி டெல்லி வந்தடைந்தார்.
ராணாவை, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய உடனேயே, NIA அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக கைது செய்தனர். அவரை திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவரை 18 நாட்கள் NIA விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில், ராணா மும்பை குடியேற்ற சட்ட மையம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் டேவிட் ஹெட்லிக்கு இந்தியாவில் சுதந்திரமாக செயல்பட உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. ஹெட்லி இந்தியாவின் பல நகரங்களுக்கு ராணா நிறுவனத்தின் பிரதிநிதியாக பயணம் செய்துள்ளதாகவும், ராணாவும் 2008 நவம்பரில் இந்தியா வந்திருந்ததாகவும் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை மூலம் 26/11 தாக்குதலுக்குப் பின்னால் இருந்த விஷயத்தை விரிவாக வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.