புதுடில்லி: 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 464 கோடி என்று மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் பயன்பெறும் நபர்களுக்கு மத்திய அரசு உரிய நேரத்தில் ஊதியத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதனால் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசுகள் தங்கள் நிதியில் இருந்து ஊதியத்தை செலுத்தி வருகிறது. இதனால் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.
என்றபோதிலும் நிலுவைத் தொகை முழுமையாக விடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில் “100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 464 கோடி ரூபாய் விடுவிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.