புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 34-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகளை ஆணையத்தில் முன் வைத்தனர்.
கூட்டத்திற்கு பின் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் அளித்த பேட்டியில், ”உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஜூன் முதல் செப்டம்பர் வரை தமிழகத்திற்கு 119.46 டிஎம்சி தண்ணீர் வர வேண்டும்.
ஆனால் தற்போது வரை 200 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் வந்துள்ளது. ஆனால் அதில் அதிகப்படியான நீர் உள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி வழங்கப்பட உள்ள மாதாந்திர தண்ணீரில் இதை சேர்க்க கூடாது என வலியுறுத்தியுள்ளோம்.
ஏனெனில் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் தண்ணீர் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கனமழையால் வரும் உபரி நீரை ஓரிரு வாரங்களில் திறந்துவிட முடியாது.
அதன்பின் தமிழகத்துக்குத் தர வேண்டிய தண்ணீரைக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம் என்பதுதான் எங்கள் தரப்பின் முக்கிய வாதங்கள். அதையே கூட்டத்திலும் வலியுறுத்தினோம்.
அதேபோல், மேகதாது அணை விவகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லாததால், அது குறித்து விவாதம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.