பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயாரை இண்டி கூட்டணி அவதூறு செய்ததை கண்டித்து, செப்டம்பர் 4ஆம் தேதி பீஹாரில் முழு அடைப்பு நடைபெறும் என்று தேஜ கூட்டணி அறிவித்துள்ளது. இந்த போராட்டம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். அத்தியாவசிய சேவைகள், குறிப்பாக மருத்துவ சிகிச்சை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படாது எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பீஹார் மாநில பாஜ தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்து நடைபெறும் என தெரிவித்தார். அதேசமயம், பாஜ மகளிர் அணி முன்னின்று போராட்டத்தில் பங்கேற்கும் என்று கூறினார். இந்த அறிவிப்பு பீஹாரில் அரசியல் சூழலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த முடிவுக்கு பின், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் உமேஷ் குஷ்வாஹா, எதிர்க்கட்சிகள் தர்பங்காவில் நடத்திய பேரணியில் அநாகரீகமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை கடுமையாக விமர்சித்தார். அவர், அரசியல் முறையில் மட்டுமல்லாமல், சமூக பார்வையிலும் இது ஏற்க முடியாத செயல் எனக் குறிப்பிட்டார்.
பீஹாரில் நடைபெறவுள்ள இந்த முழு அடைப்பு, மாநிலத்தின் அரசியல் சூழலை சூடுபிடிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டி கூட்டணியின் அவதூறு கருத்துக்களை கண்டித்து மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்துடன், தேஜ கூட்டணி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு இந்த போராட்டம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.