பீஹாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆழ்ந்த வருத்தம் வெளியிட்டார். கார்கிலில் இருந்து குமரிவரை நாடு முழுவதும் மக்கள் துக்கத்தில் மூழ்கியிருப்பதை நினைவுபடுத்திய அவர், இந்த தாக்குதலால் நாடே கொந்தளிக்கிறது எனக் கூறினார். பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முழுமையாக வேரறுப்போம் என்றும், தண்டனை தவிர்ப்பது யாருக்கும் சாத்தியமில்லை என்றும் உறுதி அளித்தார்.

பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் மீது வேட்டையாடப்படும் என்று மோடி கூறினார். “இந்தியாவின் மீது கை வைத்தவர்கள், கனவிலும் நினைக்க முடியாத தண்டனையை சந்திக்க நேரிடும். இன்று பீஹார் மண்ணிலிருந்து உலகத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் – பயங்கரவாதிகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது” என்றார்.
தாக்குதலில் பலியானோருக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். இந்த துயரமான நேரத்தில் இந்தியாவுடன் நிற்கும் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களுக்கு துணைநின்றவர்களும் கண்டறியப்படுவார்கள் மற்றும் உரிய தண்டனை பெறுவர் என்றார்.