உத்தரகாண்ட்: பொது சிவில் சட்டத்திற்கான விதிகள் மற்றும் பிரத்யேக இணையதளம் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியால் தொடங்கப்பட்டது. பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் பழங்குடியினர் தவிர அனைவருக்கும் பொருந்தும். திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற விஷயங்களில் அனைத்து மதங்களும் ஒரே சட்டத்தை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் பொது சிவில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி, நாட்டின் முதல் மாநிலமான உத்தரகாண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு, அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், இன்று முதல் நாட்டிலேயே முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் போஸ்டில் குறிப்பிட்டுள்ளதாவது, “பொது சிவில் சட்டத்திற்கான விதிகள், அதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி உட்பட சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளன.
பொது சிவில் சட்டம் சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். இது அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும். நாட்டை வளர்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்ற பிரதமர் மோடி நடத்தும் யாகத்தில் இந்தச் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்துவது ஒரு பிரசாதம் மட்டுமே” என்றார். இந்நிலையில், உத்தரகாண்ட் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொது சிவில் சட்டத்திற்கான இணையதளத்தை முதல்வர் தாமி தொடங்கி வைத்தார்.