சென்னை அண்ணாநகர் பகுதியில் பெட்ரோல் குண்டை வீசியவர் சிறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னை அண்ணாநகரில் இரண்டு பகுதிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அண்ணாநகரை சேர்ந்த ரெட்டி பாலமுரளி என்பவர் பெட்ரோலை வீசியது தெரியவந்தது.
ஏற்கனவே ரெட்டி பாலமுரளி மீது கொலை முயற்சி மற்றும் தாக்குதல் வழக்குகள் உள்ளதால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் சிறைக்கு செல்ல விரும்புவதாகவும், அதனால் தான் பெட்ரோல் குண்டை வீசியதாகவும் கூறினார்.
மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் அவர் பேசியது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவுன்சிலிங் அளித்துள்ளதாகவும், மருத்துவரின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
அண்ணாநகரில் உள்ள போலீஸ் பூத் மற்றும் டாஸ்மாக் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.