புதுடில்லி: உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பஹல்காம் தாக்குதல் விசாரணையை ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டி வருகிறது.
அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், விசா ரத்து என பல்வேறு அதிரடிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பஹல்காம் தாக்குதல் விசாரணையை ஜம்மு காஷ்மீர் போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆதாரங்கள் திரட்டப்படுகின்றன. மேலும், தாக்குதலை நேரில் பார்த்தவர்களிடம் தகவல்களை கேட்டுப்பெற்று விசாரணை தீவிரப்படுத்த தேசிய புலனாய்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.