புதுடெல்லி: 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதையடுத்து 2021-ம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் சுமார் 4 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும். இதன் அடிப்படையில், வரும் 2028ல் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-
2025 ஜனவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கும்.இந்த முறை மொபைல் ஆப் மூலம் கணக்கெடுப்பு நடத்தலாம். கணக்கெடுப்பு பணியில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி சுமார் 2 ஆண்டுகள் நீடிக்கும். சட்டப் பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக வரும் 2026-ம் ஆண்டு மத்திய அரசால் சிறப்பு ஆணையம் அமைக்கப்படும்.
அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் சிறப்பு ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்யும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொகுதி மறுவரையறையின் போது பெண்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்.
தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி 2028-க்குள் நிறைவடையும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நாடு முழுவதும் 2,650 சாதிகள் உள்ளன. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:- மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டே நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு திட்டமிட்டு காலதாமதம் செய்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்கள் மக்கள் தொகைக் குறைவைக் கண்டுள்ளன.
தொகுதி மறுவரையறையின் போது அந்த மாநிலங்கள் பாதிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முன்னதாக மத்திய அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த வேண்டும். தேசிய, பிராந்திய கட்சிகளின் சந்தேகங்களுக்கு மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.