புதுடில்லி: விமானி சஸ்பெண்ட்… டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம், ஓடுபாதையில் மோதி விபத்தில் சிக்கிய சம்பவத்தில், அஜாக்கிரதையாக இருந்த விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டில்லி விமான நிலையத்தில் இருந்து, செப்டம்பர் 9ம் தேதி 6E 6054 என்ற விமானம் பெங்களூருக்கு புறப்பட்டது. ஆனால் விமானம் ஓடுபாதையில் மோதியதில் வால் பகுதியில் சேதம் ஏற்பட்டது. இதனால் நீல நிறமாக இருந்த விமானத்தின் வால் பகுதி, தரையில் உராய்ந்த வேகத்தில் வெள்ளை நிறமாக மாறிவிட்டது.
இது குறித்து இண்டிகோ விமான நிர்வாகம் கூறியதாவது: விமானத்தில் சேதமடைந்த பகுதிகளை பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. புறப்படும் போது அல்லது தரையிறங்கும் போது வால்பகுதி ஓடுபாதையைத் தொடும் போது விபத்து ஏற்படுகிறது. விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு தகவல் தெரிவித்தார்.
பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் மற்றும் டில்லி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிறுவன நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.