போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகளுக்கு உதவுமாறு மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியான உத்தரவாதம் அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதி ஜக்ஜித் சிங் தலிவால், கடந்த நவ., 26 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி, பஞ்சாப் அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், டிச., 20-ல் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே சிகிச்சை எடுப்பேன் என்று தளிவால் கூறியுள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பஞ்சாப் விவசாயத்துறை அமைச்சர் குர்மீத் சிங் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உதவ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் மத்திய வேளாண் அமைச்சகத்துக்கு கடந்த 1-ம் தேதி கிடைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. இதுகுறித்து பஞ்சாப் அமைச்சர் குர்மீத் சிங் கூறுகையில், விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.