புதுடில்லி: விண்வெளியில் செயற்கைக்கோள்களின் இரண்டாவது இணைப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
2035ம் ஆண்டுக்குள் இந்தியா தனியொரு விண்வெளி மையத்தை அமைக்க திட்டமிட்டு உள்ளது. அதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ககன்யான் திட்டத்தின் கீழ் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு, விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணைக்கும் ‘டாக்கிங்’ தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவது முக்கியமாகிறது.

இதற்காக தலா 220 கிலோ எடையுள்ள ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் பி என்ற இரட்டை விண்கலன்கள் உருவாக்கப்பட்டன. இவை, பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
இந்த இரு செயற்கைகோள்களை விண்வெளியில் இணைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி, முதல் ‘டாக்கிங்’ செயல் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது, இரண்டாவது முயற்சியும் வெற்றி பெற்றதாக ஜிதேந்திர சிங் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த இரண்டு வாரங்களில் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.