டெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள காத்தூர் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள பெயர் பலகையில் உருது மொழியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் கவுன்சிலர் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உருது அந்நிய மொழி அல்ல, இந்த நாட்டில் பிறந்த மொழி என்றும், அதன் பயன்பாட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மொழி மதத்தைக் குறிப்பதில்லை; மொழி என்பது ஒரு சமூகத்திற்கும், ஒரு பகுதிக்கும் சொந்தமானது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
மேலும், “நாட்டின் பன்முகத்தன்மை மகத்தானது – அதுவே நமது பலம், பன்முகத்தன்மையை நாம் மதித்து அனுபவிக்க வேண்டும். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 22 பட்டியலிடப்பட்ட மொழிகள் உட்பட 234 தாய்மொழிகள் உள்ளன. இந்தியாவில் அதிகம் பேசப்படும் 6வது மொழி உருது,” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.