டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை நிகழ்வில் கலந்து கொண்ட குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், தமிழ்நாடு அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் அதிகபட்சம் மூன்று மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய உச்சநீதிமன்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நீதிமன்றம் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் முறை ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பில் உள்ள பிரிவு 142ஐ நீதிமன்றம் ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக பயன்படுத்துவதாக அவர் விமர்சித்தார். நீதிபதிகளுக்கு அரசியலமைப்பின் 145வது பிரிவை எடுத்துரைப்பதற்கான உரிமை மட்டுமே இருப்பதாகவும், அதற்கும் மீறி குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பித்தது அரசியலமைப்பை மீறுவதாகவும் குறிப்பிட்டார்.
ஜெகதீப் தன்கர் மேலும், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றமா என்ற கேள்வியையும் எழுப்பினார். சட்டம் இயற்றுவது மற்றும் நிர்வாக அதிகாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை நீதிமன்றம் செய்யத் தொடங்கியிருப்பதாகவும், இது நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மீறும் செயல் எனவும் கூறினார்.
இந்த பேச்சு, நாடு முழுவதும் அரசியல் மற்றும் சட்டத் துறைகளில் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.