புதுடில்லி: உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் அரசியலமைப்பின் கீழ் சமமான நிலையைப் பகிர்கின்றன, ஒன்றுக்கொன்று மேலானவை அல்ல என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேசன் நடத்திய சுதந்திர தின விழாவில் அவர் பேசினார். நீதிபதிகள் நியமனத்தில், சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற கொலீஜியமே முதல் முடிவை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற கொலீஜியம், உயர்நீதிமன்ற கொலீஜியத்திற்கு உத்தரவிட முடியாது. நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்; அவர்கள் ஏற்றுக்கொண்ட பின்பே பெயர்கள் உச்சநீதிமன்றத்திற்கு வரும்.
அரசியலமைப்பு அடிப்படையில் இரு நீதிமன்றங்களும் சமமானவை; உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பிரிவு இல்லை. “சட்டத்தை விளக்குவதே அல்ல, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய ஜனநாயக மதிப்புகளை நிலைநிறுத்துவதே நீதிபதிகளும் வக்கீல்களும் செய்ய வேண்டிய முக்கிய கடமை” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள், உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வக்கீல்களை உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நேரடியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலாக வந்ததாக கூறப்படுகிறது.