உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மஹி பகுதியில் அணுமின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இங்கு 2,800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் அணுமின் நிலையம் அமைக்கப்படும்.
இந்நிலையில் சோட்டி சர்வான் கிராமத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு அணுமின் நிலையம் அமைக்க சோட்டி சர்வான் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து இடத்தை காலி செய்ய உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, கிராம மக்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அந்த கும்பலில் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். 3 போலீசார் மற்றும் சில கிராம மக்கள் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.