புதுடில்லி: தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இது, வாகன ஒட்டுநரின் அலட்சியமே விபத்துக்குக் காரணமாக இருந்தால், காப்பீட்டு நிறுவனம் பொறுப்பற்றது என்பதைக் கூறும் முக்கிய தீர்ப்பாகவும், எதிர்கால வழக்குகளுக்கு முன்மாதிரியாகவும் அமைகிறது.

கர்நாடகா மாநிலம் மல்லசந்திராவைச் சேர்ந்த ரவிஷா, 2014 ஜூன் 18ஆம் தேதி, தனது பெற்றோர், சகோதரி மற்றும் குழந்தைகளுடன் காரில் பயணித்தபோது, கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் கவிழ்ந்து உயிரிழந்தார். குடும்பத்தினர், ‘மூன்றாம் தரப்புக்கான காப்பீடு’ பிரிவின் கீழ் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அரசிகரேயில் உள்ள விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், காரை அவர் அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டதாகக் கூறி, தீர்ப்பாயம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த முடிவை எதிர்த்து, அவரது குடும்பம் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம், ரவிஷா வாகனத்தைத் தனக்கு சொந்தமானதுபோல ஓட்டியதாலும், அவரது சொந்த தவறால் விபத்து ஏற்பட்டதாலும், காப்பீட்டு நிறுவனம் பொறுப்பாக முடியாது எனக் கூறி தீர்ப்பாயத்தின் முடிவை ஏற்றது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கையும் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் மகாதேவன் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.
விசாரணையின் போது போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரவிஷா வாகனம் தவறான முறையில் ஓட்டியதே விபத்துக்கு நேரடியான காரணம் என்பதை தெளிவுபடுத்தியது. நீதிபதிகள் அதனை அடிப்படையாகக் கொண்டு, அவரது வாரிசுகள் இழப்பீடு பெற உரிமையில்லை என்றும், காப்பீட்டு நிறுவனம் இத்தகைய சம்பவங்களில் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த தீர்ப்பு, பொது பாதுகாப்பை சீராக வலுப்படுத்தும் வகையில், வாகன ஓட்டுபவர்களின் பொறுப்புணர்வை வலியுறுத்துகிறது.