திருவனந்தபுரம்: கேரள நிதியமைச்சர் பாலகோபால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோட்டில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஒரு முஸ்லிம் மாணவி அவருக்கு கை கொடுத்தார்.
மலப்புரம் மாவட்டம் கொட்டக்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல் நவ்ஷாத் (37) என்பவர் இது ஷரியா சட்டம் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையறிந்த மாணவி, நவ்ஷாத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோழிக்கோடு குந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் நவ்ஷாத் மீது கலவரத்தை ஏற்படுத்த முயன்றது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நவ்ஷாத் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி குஞ்சிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது.
அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி நவ்ஷாத்தின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், எந்த மத நம்பிக்கையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேல் இல்லை என்று நீதிபதி கூறினார்.