பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இதனை தொற்று நோயாக மாநில அரசு அறிவித்துள்ளது.
கொசுக்கள் உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வரை மாநிலம் முழுவதும் 27 ஆயிரத்து 189 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதில், பெங்களூரு நகரில் 10,000-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், “முன்பு, ஒரே ஆண்டில் அதிகபட்சமாக, 24 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை தாண்டியுள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அனைத்து மாவட்ட கலெக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
கொசுக்களை ஒழிப்பதுடன், சுகாதாரமற்ற பகுதிகளை கண்டறிந்து, துப்புரவு பணியும் மேற்கொண்டு வருகிறோம். வீட்டில் சுகாதாரத்தை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் கர்நாடக தொற்று நோய் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.