திருவனந்தபுரம்: சபரிமலையில் உள்ள மாளிகைபுரத்தம்மன் கோயில் அருகே புதிய நவக்கிரக கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகத்திற்காக சபரிமலை பாதை 11-ம் தேதி திறக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக நேற்று முன்தினம் சுத்திகிரி பூஜைகள் நடைபெற்றன. தந்திரி கண்டரர் ராஜீவர் தலைமையில் நேற்று காலை 11.02 மணிக்கு கும்பாபிஷேக சடங்குகள் தொடங்கின. பின்னர் அஷ்டபந்தலேபனம், கலசாபிஷேகம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகியவை செய்யப்பட்டன.

நவக்கிரக கோயிலின் கும்பாபிஷேக சடங்குகள் பிரசன்ன பூஜை மற்றும் தீபாராதனையுடன் நிறைவடைந்தன. நவக்கிரக கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று சபரிமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நேற்று இரவு 10 மணிக்கு கோயில் பாதை மூடப்பட்டது. ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் 16-ம் தேதி மாலை மீண்டும் திறக்கப்படும்.