கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டம் பொம்மலாபுரா கிராமத்தில், புலி ஒன்று சுற்றித்திரிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. அச்சமடைந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
ஆனால், காலை 8.30 மணிக்கு தகவல் அளித்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக, காலை 10 மணிக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், புலியைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் அதிகாரிகளை அடைத்து வைத்தனர். சுமார் 20 நிமிடங்கள் அந்த அதிகாரிகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர்.
வனத்துறை அதிகாரிகள் மெத்தனமாக நடந்து கொண்டதாகவும், புலியைப் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். பின்னர் கிராம மக்கள் அவர்களை கூண்டிலிருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புலி அச்சத்தில் வாடும் கிராம மக்கள், வனத்துறை மீது அதிருப்தியடைந்துள்ளதையும் இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது.