இன்று இரவு 9.58 மணிக்கு ஏவ திட்டமிட்டிருந்த பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட், விண்வெளியில் டிராபிக் ஜாம் காரணமாக இரண்டு நிமிடங்கள் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோ இன்று ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’ மற்றும் ‘ஸ்பேடெக்ஸ்-பி’ எனும் தலா 220 கிலோ எடை கொண்ட இரு சிறிய செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 470 கிலோமீட்டர் உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்த உள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்தபோது, “அதே சுற்றுவட்ட பாதையில் உள்ள பிற செயற்கைக்கோள்களின் நெருக்கடி காரணமாக ஏவுதல் தாமதமாகியுள்ளது. இது விண்வெளியில் டிராபிக் ஜாம் எனப்படும் நிலைமையை உருவாக்கியுள்ளது,” என்று தெரிவித்தார்.
விண்வெளியில் சுற்றி வரும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 7,000 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டன. இவை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இவை உலகளாவிய இணைய சேவையை வழங்குவதற்காக செயல்படுகின்றன.
இஸ்ரோ தற்போது ‘SpaDeX’ எனும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது 2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையாக உள்ளது.
இன்று இரவு ஏவப்படும் இந்த பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட், இந்திய விண்வெளி துறையில் மேலும் ஒரு முக்கியமான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.