புதுடில்லி: துப்பாக்கியை கொண்டு ரீல்ஸ் எடுக்கும் போது வாலிபர் உயிரிழந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ் பெறுவதற்காக இளைய சமூகத்தினர் செய்யும் சம்பவங்கள் தினமும் செய்தியாகின்றன. ரீல்ஸ் மோகத்தில் வித்தியாசமாக செய்கிறேன் என்று தொடங்கும் சம்பவங்கள் விபரீதத்திலேயே முடிகின்றன. எனினும், இத்தகைய சம்பவங்கள் குறைந்தபாடில்லை.
இந்த வரிசையில் டெல்லி நபர் ரீல்ஸ் மோகத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியில் உள்ள தலுப்புராவை சேர்ந்த பவன் என்ற நபர் துப்பாக்கியை வைத்து ரீல்ஸ் எடுக்க முயற்சித்து உயிரிழந்தார். தனது நண்பரின் உரிமம் பெற்ற உண்மையான துப்பாக்கியை கொண்டு ரீல்ஸ் எடுக்கும் போது பவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது, துப்பாக்கியை தனது இடுப்பில் இருந்து எடுத்த பவன், அதில் தோட்டாவை வெற்றிகரமாக செலுத்தி, துப்பாக்கியை தன் நெஞ்சு பகுதியை நோக்கி வைத்து, துப்பாக்கியின் ட்ரிகரை லேசாக அழுத்தினார். உடனே துப்பாக்கியில் இருந்த தோட்டா பவனின் நெஞ்சை துளைக்க, அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே பவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி பவன் உயிரிழந்துள்ளார்.
வீடியோ பதிவின் போதே, துப்பாக்கியை பவனிடம் கொடுத்த நபர் “சுடாதீர்கள் சகோதரரே, வேண்டாம்” என்று கூறும் ஆடியோ பதிவாகி இருக்கிறது. சம்பவம் குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த வீடியோவை பதிவு செய்தவரும், பவனின் நண்பர் துப்பாக்கியில் எப்படி தோட்டாவை வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். ரீல்ஸ் எடுக்கவே பவன் துப்பாக்கியை பெற்றிருக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், பவனிடம் துப்பாக்கியை கொடுக்கும் போது, அதனை லாக் செய்ததாக அவரது நண்பர் தெரிவித்திருக்கிறார். எனினும், துப்பாக்கி சரியாக லாக் ஆகாத காரணத்தால், துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியேறி இருக்கிறது.