திருவனந்தபுரம்: கேரள மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கியிருந்தவர் நேற்று மீட்கப்பட்டார். இது தொடர்பாக 3 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கேரள போலீசார் நேற்று கூறியதாவது:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் நாயர் (59) என்பவர் கடந்த சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றார். அவர் வீடு திரும்பாததால், ரவீந்திரன் நாயரின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை வழக்கம்போல் லிப்ட் இயங்கத் தொடங்கியது. அப்போது ரவீந்திரன் 2 நாட்களாக லிப்ட் உள்ளே இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
பின்னர் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வெளிநோயாளிகள் பிரிவில் உள்ள லிப்டில் முதல் மாடிக்கு செல்ல முயன்றபோது லிப்ட் கீழே சென்று திறக்கவில்லை என்றார். காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்ட போதும் யாரும் உதவிக்கு வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் செல்போனும் வேலை செய்யாததால் குடும்பத்தினர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இவ்வாறு கேரள போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ரவீந்திரன் நாயர் கூறுகையில், “லிஃப்ட் உள்ளே இருந்த அவசர எண்களுக்கு நான் அழைத்தேன், ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை. அதில் இருந்த எச்சரிக்கை ஒலி பட்டனையும் அழுத்தினேன். அப்போதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதன்பிறகு, இரண்டாவது சனிக்கிழமைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும் என்று கருதி, உதவிக்காக காத்திருந்தேன்.
இதனிடையே, பணியில் அலட்சியமாக இருந்ததாக மருத்துவமனையின் லிப்ட் ஆபரேட்டர்கள் 2 பேர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனரகத்துக்கு அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.