சமீபத்தில் தடையை மீறி அரசியல் பேசிய தெலுங்கானா முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பி.ஆர்.நாயுடு எச்சரித்துள்ளார். இந்துக்களின் புனித தலமான திருமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை தரிசித்து வருகின்றனர்.
சுவாமியை தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இக்கோயில் உலகப் புகழ் பெற்றது. எனவே, இங்கு என்ன செய்தாலும், அது உடனடியாக நாடு முழுவதும் பிரபலமாகிறது. இதை சில அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்துகின்றனர்.
இதையறிந்த அறங்காவலர் குழுவின் புதிய தலைவர் பி.ஆர்.நாயுடு, தான் பதவியேற்ற பின் நடந்த முதல் அறங்காவலர் கூட்டத்தில் திருமலையில் இனி யாரும் அரசியல் பேசக்கூடாது என்றும், அப்படி யாராவது பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார். இது தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை கோயிலில் இருந்து வெளியே வந்த பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானா முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாஸ் கவுட், தெலுங்கானா பக்தர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உரிய மரியாதை அளிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். திருமலையில் இதுபோன்ற பேச்சுக்கள் கூடாது என்பதால், சீனிவாஸ் கவுட் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு நேற்று சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.