இஸ்லாமாபாத்: துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் இந்தியாவை எதிர்த்து முக்கியமான கருத்தை வெளியிட்டதன் பின்னணி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான பதட்டமான சூழ்நிலையில், துருக்கி தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்து வருகிறது. போர் உபகரணங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதற்கிடையில், பாகிஸ்தான் இந்தியா மீது நடத்திய தாக்குதல்களில் சீனா மற்றும் துருக்கி தயாரித்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், துருக்கி பிரதமர் எர்டோகன், பாகிஸ்தான் நமது நட்பு நாடு அல்ல, அது நமது சகோதர நாடு என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் சரீஃபை தனது சகோதரராக விவரித்தும், எதிர்காலத்தில் மேலும் நெருக்கமாக பணியாற்ற விருப்பம் உள்ளதாகவும் கூறினார். இது, இந்தியா தொடர்பாக துருக்கி எடுத்திருக்கும் புதிய எதிர்மறை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
இந்தியர்கள் தற்போது துருக்கி நாட்டுக்கு பயணிப்பதை பெரிதும் தவிர்த்து வருகின்றனர். மேக்மைட்ரிப், கிளியர்ட்ரிப் போன்ற ஆன்லைன் பயண தளங்களில் துருக்கிக்கு முன்பதிவுகள் 60% சரிந்துள்ளன. ரத்துசெய்தல்கள் 250% முதல் 260% வரை உயர்வடைந்துள்ளன. இது துருக்கிக்கு பொருளாதார ரீதியாக பெரிய இழப்பாகவும் பார்க்கப்படுகிறது.
துருக்கி பாகிஸ்தானுக்கு வழங்கும் ஆதரவிற்கு காரணமாக, இஸ்லாமிய ஒற்றுமை, காஷ்மீர் விவகாரம், இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அரசியல் அமைப்புகளில் ஒருமித்த நோக்கம் ஆகியவைகள் கூறப்படுகின்றன. சர்வதேச அரங்கிலும், ஐ.நா. போன்ற அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுடன் துருக்கி இணைந்து செயல்படுகிறது.
இந்தியாவோ, துருக்கியை நேரடியாக எதிர்த்தது கிடையாது. நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் நேரிட்டபோது இந்தியா உதவும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஆனாலும், இந்தியா போர் நேரத்தில் பாகிஸ்தானுக்கு துருக்கி உதவி செய்வது ஏன் என்ற கேள்வி தற்போது பெரிதும் எழுந்துள்ளது.