சென்னை: ‘மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்? என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த பட்ஜெட் மீதான சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் ஜிதேந்திர சிங் பேசியதாவது: மத்திய அரசு வழங்கும் திட்டங்களை தமிழக அரசு பயன்படுத்தாமல் பொறுப்பற்றது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது.
இந்த பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கானது. முத்ரா கடன் வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஊக்கமளிக்கிறது.
போராட்டம் எதற்கு?
தமிழகத்திற்கு பிரதமர் பல திட்டங்களையும், நிதியையும் வழங்கி வருகிறார். பிறகு ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? பட்ஜெட்டில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 5 மடங்கு வளர்ச்சி அடையும். மற்ற மாநிலங்களை விட, தமிழகம் ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கிறது. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்?
தனி இடம்
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பிறகு ஏன் அவர்கள் (திமுக) போராட்டம் நடத்துகிறார்கள்? பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார். பிரதமர் தமிழ் மக்களையும் தமிழ் கலாச்சாரத்தையும் நேசிக்கிறார். அவருக்கு தமிழகம் என்றால் மிகவும் பிடிக்கும், அவரது இதயத்தில் தமிழகத்திற்கு தனி இடம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.