புதுடில்லியில் நடைபெற்ற ராஜ்யசபா கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், துணை ஜனாதிபதி மற்றும் ராஜ்யசபா சபாநாயகர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவையில் உறுப்பினர்கள் நடத்தை குறித்து முக்கியமான ஆலோசனைகள் வழங்கினார். உரிமைக்காக வாதிடுவது மக்களாட்சியின் அடிப்படை என்றாலும், அதனை மரியாதையுடனும் ஒழுக்கத்துடனும் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “அவையில் கண்ணியம் காத்து பேசுங்கள், ஆனால் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள்” எனும் வாக்குமூலத்தால் அவர் தமது கருத்தை தெளிவுபடுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 29 பேர், அதில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய கட்சிகளின் ராஜ்யசபா குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இது ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதல் முக்கிய கலந்துரையாடல் என்பதால், அனைவரும் அதிக கவனம் செலுத்தினர். கூட்டத்தில், அவையின் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு உறுப்பினரும் தங்களின் பங்களிப்பை ஆக்கப்பூர்வமாக வழங்க வேண்டும் என அவர் கூறினார்.
துணை ஜனாதிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவையின் புனிதத்தன்மை குலையாமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அரசியல் சாசனமும், விதிமுறைகளும் அவைகளுக்கான வழிகாட்டியாக செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கேள்வி நேரத்தில் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நேர்மையான பதில்களை வழங்க வேண்டும் என்பதையும் கூட்டத்தில் பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.
சிறிய அரசியல் கட்சிகளுக்கும் உரையாற்ற அதிக நேரம் வழங்க வேண்டும் எனவும், நீண்ட உரைகள் மூலம் அவை நேரத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டம் மக்களாட்சியின் மதிப்பை உயர்த்தும் வகையில் அமைந்ததாகவும், எதிர்காலத்தில் அவையின் ஒழுங்கு மற்றும் கண்ணியம் மேலும் வலுப்பெறும் எனவும் வட்டாரங்கள் தெரிவித்தன.