திருமலை: கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 5-ம் தேதி முதல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் பெறுவதை தற்காலிகமாக நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான விஐபி பக்தர்கள் தினமும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் அளித்த பரிந்துரை கடிதங்கள் மூலம் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு விஐபி பிரேக் தரிசனத்திற்கு வருபவர்களை கட்டுப்படுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வி.ஐ.பி.க்களின் பரிந்துரைக் கடிதங்களை ஏப்., 5-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூன் 30-ம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.