மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.
இடி, மின்னல் காரணமாக நவராத்திரி கொண்டாட்டங்கள் தடைபட்டன. மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மும்பை, பால்கர், தானே, ராய்காட், புனே மற்றும் பிற பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மழையின் போது பலத்த காற்றும் வீசியது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) தானே, முலுண்ட், குர்லா, காட்கோபர், தாதர், வோர்லி, பாந்த்ரா, பிகேசி, போரிவலி மற்றும் அந்தேரி ஆகிய இடங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை / இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தனியார் வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.