திருவனந்தபுரம்: கேரளாவில் மழை தீவிரமடைந்துள்ளது. இன்று 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு, பருவமழை 4 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கேரளா முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய வடக்கு மாவட்டங்களில், மிக கனமழை பெய்தது. இதற்கிடையில், கேரளா முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் தவிர 12 மாவட்டங்களுக்கும் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் பாலக்காடு உள்ளிட்ட 7 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 மற்றும் 26-ம் தேதிகளில் கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் சீற்றம் காரணமாக கேரளா மற்றும் லட்சத்தீவு கடல்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.