மனக்கவலை கோளாறுகள் பொதுவாக அனைவருக்கும் உண்டாகும் ஒன்று தான். ஆண் பெண் பேதம் இன்றி அனைவருக்கும் மனக்கவலை கோளாறுகள் ஏற்பட்டாலும், புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்க்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவு மனக்கவலை கோளாறுகளுக்கு உள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வுகளின்படி, ஆண்களை விட பெண்கள் இரண்டு மடங்கு மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். மனச்சோர்வு யாரையும் பாதிக்கலாம் என்றாலும், புள்ளிவிவரங்கள் ஆண்களை விட பெண்களில் அடிக்கடி ஏற்படும் என்று காட்டுகின்றன. இந்தியாவில் பணிபுரியும் பெண்கள், ஆண்களை விட அதிக மன அழுத்தத்தில் உள்ளதாக ஒரு மனநல ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் சமீபத்திய அறிக்கையாக, “ஊழியர்களின் உணர்ச்சி ஆரோக்கிய நிலை” என்ற தலைப்பில் யுவர் டோஸ்ட் சர்வேயானது 5,000க்கும் மேற்பட்டவேலை செய்யும் இந்திய மக்களைஆய்வு செய்து, பணியிடத்தில் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள் பற்றிய சில தகவல்களை பெற்றுள்ளது. 5,000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பதில்களைச் சேகரித்த பிறகு, பணியிடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளது. பதிலளித்த பெண்களில் ஏறக்குறைய முக்கால்வாசி, அதாவது 72.2% பேர் அதிக மன அழுத்தத்தை கொண்டுள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதற்கு நேர்மாறாக, ஆண்களிடம் இதே கேள்வியைக் கேட்டபோது, அவர்களில் 53.64% பேர் மன அழுத்தத்தை அனுபவிப்பதாகக் கூறியுள்ளனர்.
அதிக சதவீத பெண்களும் வேலை-வாழ்க்கை சமநிலையின்மையை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். 12% ஆண்களுடன் ஒப்பிடுகையில், 18% பெண்கள் தனிப்பட்ட மற்றும் வேலை சமநிலையின்மையைப் சமப்படுத்த போராடி வருவதாக கூறியுள்ளனர். வேலை-வாழ்க்கை சமநிலை இல்லாதது பெண்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றில்லை, அதோடு அங்கீகாரமின்மை மற்றும் குறைந்த மன உறுதி போன்ற காரணங்களும் உள்ளது என ஆய்வு கூறியுள்ளது. 9.27% ஆண்களுடன் ஒப்பிடுகையில், 20% பெண்கள் எப்போதும் தங்களை தாழ்வாகவே உணர்கிறார்கள்.
“ஊழியர்களின் உணர்ச்சி ஆரோக்கிய நிலை” அறிக்கையானது 21 முதல் 30 வயதுக்குட்பட்ட ஊழியர்கள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அதாவது, 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 64.42% ஊழியர்கள் அதிக அளவு மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்றும், 31 முதல் 40 வயதுக்குட்பட்ட 59.81% ஊழியர்கள் மிக அதிக மன அழுத்தத்தில் உள்ளனர் என்றும் ஆய்வில் கூறியுள்ளது.
மேலும், 41 முதல் 50 வயதிற்குட்பட்ட 53.5% ஊழியர்கள் மிகக் குறைந்த மன அழுத்தத்தை உணர்கிறார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி, போக்குவரத்து, பணியாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஊடகம், சட்ட சேவைகள், வணிக ஆலோசனை மற்றும் சேவைகள் மற்றும் பல துறைகளில் உள்ள ஊழியர்களை கணக்கெடுத்த பிறகு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.