சென்னை: கல்யாணம் மணப்பெண்ணின் அலங்காரம்தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதுதான் அலங்காரம்.
கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்’ என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா…
அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.
உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.
முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.
திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.
தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.
கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.