மெக்னீசியம் என்பது உடலுக்கு அவசியமான ஒரு கனிமம். எலும்புகள், தசைகள், நரம்புகள் மற்றும் இதயத்தின் செயல்பாட்டில் இது முக்கிய பங்காற்றுகிறது. இதன் குறைபாடு ஹைப்போமக்னீமியா என்று அழைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், இது கடுமையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக பெண்களில் பிஸியான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு பழக்கம், கர்ப்பம், மாதவிடாய் சுழற்சி, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மெக்னீசியம் குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது.

மெக்னீசியம் குறைபாட்டின் முதன்மை எச்சரிக்கை அறிகுறிகளில் அடிக்கடி ஏற்படும் தசைப்பிடிப்பு, காரணமில்லா சோர்வு, பலவீனம் ஆகியவை அடங்கும். இதய துடிப்பு சீர்குலைவு, படபடப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். பெண்களின் ஹார்மோன் சமநிலையில் மெக்னீசியம் முக்கிய பங்கு வகிப்பதால், இதன் குறைபாடு PMS, மாதவிடாய் வலி, மெனோபாஸ் அறிகுறிகள் ஆகியவற்றை மோசமாக்குகிறது. மேலும் மனநிலை மாற்றங்கள், பதட்டம், மனச்சோர்வு, பயம் போன்ற பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது.
எலும்பு ஆரோக்கியத்திலும் மெக்னீசியம் அவசியம். கால்சியம் உறிஞ்சுதலை சீராக்கி எலும்புகளை வலுப்படுத்துகிறது. குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் அதிகரிக்கிறது. இதுதவிர தலைவலி, ஒற்றைத் தலைவலி, உணர்வின்மை, கூச்ச உணர்வு, மலச்சிக்கல், மோசமான தூக்கம், பசியின்மை போன்ற பிரச்சனைகளும் உருவாகலாம். குறிப்பாக கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், அதிக மாதவிடாய் கொண்டவர்கள் மற்றும் வயதானவர்கள் கூடுதல் ஆபத்தில் உள்ளனர்.
எனவே பெண்கள் தினசரி உணவில் மெக்னீசியம் நிறைந்த நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள், பச்சை இலை கீரைகள் போன்றவற்றைச் சேர்க்க வேண்டும். மேலும் நீரிழிவு, சிறுநீரக நோய் அல்லது அதிக மது அருந்துதல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மெக்னீசியம் அளவை பராமரிக்க வேண்டும். சரியான அளவு மெக்னீசியம் உடலுக்கு கிடைத்தால், பல்வேறு உடல் பிரச்சனைகளை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்க முடியும்.