சென்னை: தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று.
உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்று. புதிதாய் பிறந்த குழந்தைகள் அதிக நேரம் தூங்குவார்கள். கடினமாக உடலால் உழைப்பவர்கள் 10 மணி நேரமும், மற்றவர்கள் 6 முதல் 8 மணி நேரம் வரை உறங்கினால் போதுமானது. ஆனால், இன்றைய காலத்தில் நிம்மதியான உறக்கம் என்பது கடினமான ஒன்றாகிவிட்டது.
தூக்கம் என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் தேவைப்படும் ஒன்று. ஆனால், போதுமான அளவு உறங்க அவர்களுக்கு நேரமில்லாமலும், சரியான உறக்கம் கிடைக்காமலும் பலர் அவதிப்படுகிறார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்களை தூக்கமின்மை பெரிதும் பாதிக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் ஓடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் தூக்கம் என்பது கனவாக மாறிக்கொண்டிருக்கிறது. தூக்கமின்மையால் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
இரவு நேரப் பணியில் ஈடுபடுவதும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும். பகலில் வேலைகளில் ஈடுபடுவதும், இரவில் உறங்குவதுமே நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்று. இதை மாற்றி, பகலில் உறங்குவது, இரவில் பணிகளில் ஈடுபடுவதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும் உடல் அதற்கு ஒத்துழைக்காது. மேலும், நம்மைத் தூங்க வைக்கும் ‘மெலட்டோனின்” என்கிற ஹார்மோன் இரவில் அதிகமாகவும், பகலில் குறைவாகவும் சுரக்கும்.
சரியான தூக்கம் கிடைக்காத பெண்கள் காரணமில்லாமல் எரிச்சல் அடைவார்கள். அதன் தொடர்ச்சியாக கோபம், மனச்சோர்வு, நாள் முழுவதும் மந்தமாக உணர்வது, சிறிய பிரச்சனையைக்கூட பெரியதாக நினைத்து கவலைப்படுவது என மனரீதியான பாதிப்பிற்குள்ளாகிறார்கள்.
தூக்கமின்மை பிரச்சனையின் ஆரம்பத்தில் கண் எரிச்சல், தலைவலி, தீராத ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் மாதவிடாய் சுழற்சிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின்மை பிரச்சனைக்கு வித்திடும். இதில் கவனம் எடுத்துக் கொள்ளாவிட்டால், சிறிது காலத்திலேயே இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம், நீரிழிவு என பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பெண்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்கவேண்டும். தூக்கம் குறையும்போது அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். இரவில் தூங்க செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக சாப்பிட்டுவிட வேண்டும்.
காலையில் தினமும் நடைப்பயிற்சி அவசியம். அது சீரான தூக்கத்திற்கு துணைபுரியும். சிலர் காலையில் போதிய நேரம் கிடைக்கவில்லை என்று இரவில் உடற்பயிற்சி செய்வார்கள். இது தவறான பழக்கம். தூக்கமின்மை பிரச்சனைக்கு இரவு நேர உடற்பயிற்சியும் முக்கிய காரணம்.
இரவில் ஆழ்ந்து தூங்க விரும்புகிறவர்கள் மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவதை தவிர்ப்பது அவசியம். மனக்கவலைகளை ஒதுக்கி வைக்க வேண்டும். படுக்கையில் அலுவலகப் பணிகளை செய்வதையும் தவிர்த்திட வேண்டும்.