சென்னை: பருவநிலை மாற்றம் உதடுகளை உலர்வடைய செய்துவிடும். எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும். குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உதடுகள் மற்ற உடல் பாகங்களில் இருந்து மாறுபட்டவை. அவை எளிதில் உணர்திறனையும், தூண்டுதல் உணர்ச்சியையும் வெளிப்படுத்தக்கூடியவை. உலரும் உதடுகளை பாதுகாக்க எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சருமத்தின் மென்மையை பராமரிக்க உதவும். முகப்பரு, வறண்ட சருமம், சரும துளைகள், வெயில் மற்றும் உதடு உலர்வது போன்ற பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.
உலர்ந்த உதடுகளை பாதுகாக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். தேனைப் போலவே, கற்றாழை நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. உலர் வடைந்த, வெடிப்பு தன்மை கொண்ட உதடுகளுக்கு நல்ல பலனை தரும்.
தூங்க செல்வதற்கு முன்பு பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தலாம். இது உதடுகளை ஈரப் பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். உதடு வெடிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
ஓரிரு நாட்கள் வெண்ணெய்யை பயன்படுத்தினால் உலர்வடைந்த உதடுகள் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். வெடிப்புத் தன்மை கொண்ட உதடுகளை பாதுகாப்பதற்கு தேன் உதவுகிறது. உதடுகளை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக் கவும் துணைபுரியும்.
குளிர்காலத்திலும், பருவநிலை மாறும்போதும் உதடுகளை வறட்சியில் இருந்து பாதுகாப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். உதடுகளை கடிப்பது, உதட்டு அடுக்குகளில் இறந்திருக்கும் செல்களை நாக்கால் வருடுவது போன்றவை நல்ல பழக்கம் அல்ல. உதட்டில் வறட்சி, வெடிப்பு உண்டானால் அலட்சியமாக இருக்கக்கூடாது.
அது பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாகி விடும். உதடுகள் உலர்ந்து கொண்டிருந்தால் நாக்கில் உள்ள உமிழ்நீரை உதட்டில் தடவி ஈரப்பதமாக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது உதடுகளை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.