சென்னை: சுவை கசப்பாக இருந்தாலும், உடலுக்கு அற்புதமான நன்மைகளை அள்ளித்தரும் பாகற்காய் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.
இனிமைக்கு (இனிப்புக்கு) முதல் எதிரியே இந்த பாகற்காய்தான். கசப்பு தன்மை கொண்ட பாகற்காய்யில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்கள் ஏராளம்…ஏராளம்… கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும்.
வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. இதில் உள்ள “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கு தீர்வாக உள்ளது. “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. கண்ணை போல் பாதுகாக்கும் பாகற்காய் என்றும் கூறுவர் கிராமத்தில்.
பசுமையான பாகற்காய்கள், ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் வல்லது. இதனால் இதை வாரத்தில் இருமுறையாவது உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது ஆகும். தினந்தோறும் ஒரு டம்ளர் பாகற்காய்ச் சாற்றை அருந்தினால், ஈரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்குகிறது. அதிலும் ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் இதன் பலனை அற்புதமாக உணரலாம். ஆனால் இதன் கசப்பு தன்மை பலருக்கு வெறுப்பை தரும். ஆனால் அந்த கசப்புதான் உடலில் உள்ள நோய்கிருமிகளை அடியோடு அழிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாற்காயையோ, அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், நோய்த்தொற்றுகள் அண்டவே அண்டாது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது. பாகற்காயில் உள்ள ஒருவகை வேதிப்பொருள் இன்சுலின் போல செயல்பட்டு ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
இதில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால் செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்படுகிறது. கழிவுகள் எளிதாக வெளியே தள்ளப்படுகிறது. இதன் மூலம் மலச்சிக்கல் நீங்குகிறது.
ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பேணுவதற்கு பாகற்காய் மிகவும் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு இதய நோய் எளிதில் வருவதைத் தடுக்கிறது. அதுமட்டுமா… மிக முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை பாகற்காய் கொண்டுள்ளது. என்னத் தெரியுங்களா? புற்றுநோய் செல்கள் பல்கிப் பெருகுவதை பாகற்காய் தடுக்கிறது என்பதை மறக்கவே கூடாது.