சென்னை: சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு அடிக்கடி வரும். மூக்கடைப்பு சுவாசப்பாதைகளில் உண்டாகும் அலர்ஜியால் ஏற்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்கள் குளிர்காலங்களில் இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்த மூக்கடைப்பை வீட்டிலிருக்கும் பொருள்களைப் கொண்டே குணமாக்க முடியும்.
பூண்டு மற்றும் மஞ்சள்: ஒரு டம்ளர் கொதிக்க வைத்த நீரில் 2 பூண்டு பற்களை நசுக்கி சேர்த்து அதனுடன் குழம்பு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து டீ குடிப்பது போல் குடித்து வந்தால் அடர்த்தியான சளி கரைந்து வெளியேறும். உடனடியாக பலன் கிடைக்காது என்றாலும் மொத்த சளியையும் கரைத்து பொறுமையாக வெளியேற்றி விடும். பூண்டு வாசம் ஒவ்வாமையை உண்டாக்கும் என்று பலரும் இதை விரும்பமாட்டார்கள்.
பூண்டு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டபோது வருடத்துக்கு அதிக நாள்கள் சளியோடு போராடியவர்கள் பூண்டின் பயன்பாட்டுக்குப் பிறகு வழக்கத்துக்கு மாறாக குறைந்த அளவே சளி பிரச்சனைக்கு உள்ளானது தெரிய வந்தது. பூண்டின் மணம் பிடிக்காவிட்டாலும் மூக்கடைப்பை விரட்டுவதில் நல்ல மருந்து என்று சொல்லலாம். அதனால்தான் நம் முன்னோர்கள் காய்ச்சல் காலங்களில் மிளகு பூண்டு தட்டிபோட்ட ரசத்தை அதிகமாக பயன்படுத்தினார்கள்.
யூகலிப்டஸ்: மெல்லிய துணியில் யூகலிப்டஸ் தைலம் இரண்டு சொட்டு விட்டு எப்போதும் மூக்கின் துவாரங்கள் படும் படி வைத்து முகர்ந்துகொண்டே இருப்பதும் மூக்கடப்பை விரைவில் சரிசெய்ய உதவும். சிறு குழந்தைகளுக்கு கறுப்பு வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அதை நல்லெண்ணெய் சேர்த்த அகல்விளக்கில் காண்பித்து சூடேறியதும் நெஞ்சுக்கூட்டில் வைத்து ஒற்றி ஒற்றி எடுத்தால் நெஞ்சு சளி இளகி வெளியேறும்.
தொடர்ந்து இதைச் செய்து வந்தால் நல்ல பலன் பெறலாம். சூடு மட்டும் அதிகம் இருக்க கூடாது. பெரியவர்கள் தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து சூடேற்றி அதைத் தேய்த்துவந்தாலும் அடர்ந்த சளி கரைந்து வெளியேறும்.