நம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்க கூடிய பழங்கள் என்றால் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு,பப்பாளி, மாம்பழங்கள் மற்றும் அன்னாசிப்பழங்கள் என பல உள்ளன. அதே நேரம் மலிவாக கிடைக்க கூடிய பழங்களில் முக்கியமானது கொய்யாப்பழம். கொய்யாவை பலரும் காயாக இருக்கும் போதும் சாப்பிடுவார்கள், பழுத்து பழமான பிறகும் சாப்பிடுவார்கள்.
எனினும் பழங்களை டயட்டில் சேர்த்து கொள்ளும் பலரும் கொய்யாவை சேர்த்து கொள்ள மறந்துவிடுகிறார்கள் அல்லது விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால் பலரும் குறைத்து மதிப்பிடும் இந்த பழத்தில் பழம் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. கொய்யாவின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக கொய்யா உள்ளது. இதில் ஆரஞ்சு பழங்களை விட 2 மடங்கு அதிகமான வைட்டமின் சி உள்ளது.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதிலும், நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக நம்மை பாதுகாப்பதிலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது: நீரிழிவு நோய் உலகளவில் காணப்படும் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. கொய்யாவில் அதிக நார்ச்சத்து மற்றும் லோ-கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழமாக உள்ளது.
கொய்யா இலை சாறு கூட ரத்த சர்க்கரை அளவை சிறப்பாக மேம்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியம்: பொட்டாசியம் மற்றும் சோடியம் நிறைந்த இந்த கொய்யா பழம், அதிகரித்து காணப்படும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் HDL லெவலை அதிகரிக்கவும் உதவி இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. கொய்யாவில் கலோரிகள் குறைவாகவும், ஃபைபர் சத்து அதிகமாகவும் உள்ளது.
எனவே இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், எடையை கட்டுக்குள் வைக்க மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் ஒரு நல்ல தேர்வாக அமைகிறது. அதிக கலோரி கொண்ட ஸ்னாக்ஸ்களுக்கு பதில் கொய்யாவை உங்கள் டயட்டில் சேர்த்து கொள்ளலாம். கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின்பி3 அதிகம் உள்ளது. எனவே இதனை டயட்டில் சேர்த்து கொள்வது மூளைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, நரம்புகளை ரிலாக்ஸாக வைக்கிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
கொய்யா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதிலிருக்கும் ஃபோலேட் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.